தமிழ் மக்களால் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் முக்கிய நாளேடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.
அக்கருத்துக்களின் தொகுப்பு வருமாறு:
‘த கார்டியன்’
இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினையை வட அயர்லாந்தில் ஏற்பட்ட பெரிய வெள்ளி ஒப்பந்தத்தை போல நிறைவு செய்ய சிறிலங்கா அரசு முயலவில்லை. மாறாக எறிகணைகள் மூலம் அங்கு வாழும் மக்களை படுகொலை செய்து அதனை முடிக்க அது முயற்சித்து வருகின்றது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 8 சதுர கி.மீ பரப்பளவுள்ள கடற்கரை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதனை சிறிலங்கா அரசு பாதுகாப்பு பிரதேசம் எனக்கூறினாலும் அது உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதி என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் அங்கு 128 பேர் கொல்லப்பட்டதுடன், 629 பேர் காயமடைந்துள்ளதாக புதுமாத்தளன் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பால்மா வாங்குவதற்கு என வரிசையில் நின்ற பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு இதனை மறுத்துள்ள போதும், 120 மி.மீ. எறிகணைகளின் சிதறல்களை மருத்துவர்கள் காண்பித்துள்ளனர். அதனை சிறிலங்கா படையினரே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
சிறிலங்கா படையினர் வன்னியில் இருந்து வரும் மக்களை விடுவிப்பதில்லை. அவர்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை வெளி உலகுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிப்பதில்லை. முட்கம்பிகளினால் சூழப்பட்ட இந்த முகாம்களை யாரும் அணுக முடியாது.
உதவி அமைப்புக்களைச் சேர்ந்தோர் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்ற போதும், அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை கண்காணிப்பதற்கு அவர்களை அரசு அனுமதிப்பதில்லை.
முகாமில் எத்தனை பேர் உள்ளனர் எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் போன்றன தொடர்பாக விபரங்களும் தெரிவதில்லை. வெள்ளை வான் கடத்தல்கள் மூலம் வவுனியாவில் ஒரு மாதத்தில் 25 பேர் காணாமல் போய் உள்ளனர்.
ஆனால், இடம்பெயர்ந்த மக்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கு அனைத்துலக விதிகள் உள்ளன. அவர்களுக்கு மருந்து, உணவு, உறைவிடம் என்பன வழங்கப்பட வேண்டும். தமது உறவினர்களுடன் தொடர்புகொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும். தமது கிராமங்களுக்கு திரும்பவும் அவர்களுக்கு உரிமை உண்டு.
‘த இன்டிபென்டன்’
பிரித்தானியாவில் உண்ணா நோன்பு இருப்பவர்களின் போராட்டத்தை பலர் லெப். கேணல் திலீபனின் போராட்டத்துடன் ஒப்பிடுகின்றனர். திலீபன் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவர், அவர் 1987 ஆம் ஆண்டு உண்ணா நோன்பு இருந்து மரணத்தை தழுவியிருந்தார்.
விடுதலைப் புலிகளை பிரித்தானியா தடை செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாகவே பார்க்கின்றனர். சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர்களால் மட்டுமே போராட முடியும் என நம்புகின்றனர்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்த தமிழ் மக்களின் தேசியக் கொடியை காவல்துறையினர் அகற்ற முற்பட்டிருந்தனர். அது பாரிய அசம்பாவிதங்களை தோற்றுவித்திருந்தது. ஆனால் பின்னர் கொடிகள் வைத்திருப்பதை காவல்துறை அனுமதித்திருந்ததை காண முடிந்தது.
தமிழ் மக்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதையே நாம் பிரித்தானியா அரசிடம் கேட்கின்றோம். அவர்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் ஏனெனில் யாரும் அதனை செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என உண்ணா நோன்பினை மேற்கொள்ளும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘ரெலிகிராஃப்’
போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் மேற்கொண்டு வரும் அழைப்புக்களை சிறிலங்கா அரசு நிராகரித்து வருகின்றது. இந்நிலையில் பல நாடுகளின் தமிழ் மக்கள் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் தொடர்பாக உலக மக்கள் தவறான கருத்தை கொண்டிருப்பது தொடர்பாக நாம் வேதனை அடைகின்றோம் என லண்டன் கிங் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவி லக்ஸ்மி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்பதை நாம் உலகிற்கு கூற முயல்கின்றோம்; அவர்களும் எமது சமூகத்தை சேர்ந்த சாதாரண மக்கள் தான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
‘ஈவினிங் ஸ்ரான்டட்’
இலங்கையில் கொல்லப்படும் தமது தாய்மாருக்காக இந்த மகன்மார் ஏன் பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்ரர் பாலத்தை முடக்கினார்கள்? சிறிலங்காவின் படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை நெருக்கியுள்ள நிலையில் அது பிரித்தானியா தமிழ் மக்களை கொதிப்படைய செய்துள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், பிரித்தானியா அரசு, சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவதாகவும் தமிழ்ச் சமூகத்தினரிடையே கருத்துக்கள் தோன்றியுள்ளன.
பிரித்தானியா, உலக வங்கி, உலக நாணய நிதியம் போன்றவை வழங்கும் நிதிகளும் ஆயுதக் கொள்வனவுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளினால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெளியில் தெரிவதில்லை என்பதுடன், ஊடகங்களின் பார்வையிலும் விழுவதில்லை என்ற கருத்துக்களும் தோன்றியுள்ளன.
தற்போதைய போராட்டத்தை யாரும் ஒழுங்கு செய்யவில்லை, தற்போது சிறிலங்காவில் தோன்றியுள்ள நிலை தொடர்பில் மாணவர்களாகிய நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.
எனவே எமது செல்லிடப்பேசிகள் மூலம் தகவல்களை பரிமாறி இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்தோம் என குயின்மேரி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரான கரன் முருகவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை உலகின் கவனத்தில் கொண்டு வருவதில் வெற்றியும் அடைந்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சி தொடர்பாக நாம் நீண்ட வரலாற்றை பேசும் போது, இரு அரசாட்சிகளை கொண்டிருந்த சிறிலங்கா நிர்வாகத்தை இலகுவாக பேணும் நோக்கத்துடன் பிரித்தானியா ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருந்தது.
இதனை பிரித்தானியர்களே மேற்கொண்டிருந்தனர் என பேர்லி பகுதியில் உயிரியல்துறை ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்ற என்.குலரட்ணம் என்பவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்; அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என ஆவர் மேலும் தெரிவித்தார்.
‘த ரைம்ஸ்’
சிறிலங்கா படையினருக்கு எதிராக அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பான பிரதேசத்தின் மீது எறிகணை தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது என்ற அழுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் தமிழ் மக்கள் தமது போராட்டங்களை தொடா்ந்து வருகின்றனர். 26 வருட மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது எவ்வாறு என்பது தொடர்பாக நான்கு நாடுகள் கலந்துரையாடி வருகின்றன.
வன்னியில் பொதுமக்களின் இழப்புக்களின் எண்ணிக்கை வானை தொட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களில் பாதுகாப்பு பிரதேசத்தில் 120 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாம் பாதுகாப்பான பிரதேசத்தின் மீது தாக்குதல்களை நடத்தவில்லை என அரசு மறுத்து வருகின்ற போதும் அது அங்கு சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனித உரிமை குழுவினரையும், உதவி நிறுவன பணியார்களையும் அனுமதிக்க மறுத்து வருகின்றது.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து எமது ஊடகவியலாளர்களுக்கும் சிறிலங்கா அரசு நுழைவு அனுமதி வழங்க மறுத்து வருகின்றது.
Wednesday, April 15, 2009
Subscribe to:
Posts (Atom)